×

தஞ்சை பெரிய கோயிலில் உள்ள வாராஹியைப்பற்றி சொல்லுங்களேன்?

தெளிவு பெறுஓம்தஞ்சை பெரிய கோயிலில் உள்ள வாராஹியைப்பற்றி சொல்லுங்களேன்?- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.இன்றைய காலத்தோடு ஒப்பிடுகையில் 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீவித்யா உபாசகர்களைத் தவிர வாராஹியைப் பற்றி அறிந்தவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். ரஹஸ்ய பூஜா விதிப்படி வழிபடப்படும் வாராஹியைப் பற்றி இந்த 21ம் நூற்றாண்டில்தான் அதிகமான புத்தகங்களும், உபாசனா விதிமுறைகளும் வெளிவருகின்றன. இவ்வாறிருக்க 1000 ஆண்டுகள் பழமையான பெரிய கோயிலில் வாராஹி அம்மன் அமர்ந்ததெப்படி என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ராஜேந்திர சோழன் தனது வடநாட்டுப் படையெடுப்பிற்கு சென்றிருந்தபோது காசியில் பாதாளத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட வாராஹி அம்மனை வழிபட்டு போரில் வென்று கங்கைகொண்டானாக திரும்பியவுடன் தனது தந்தை உருவாக்கிய பெரிய கோயிலில் வாராஹியையும் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்ததாகக் கூறுகிறார்கள். ஆனால் அதற்கு முன்னர் ராஜராஜ சோழனே கேரளத்து தாந்திரிக முறைப்படி வாராஹி அம்மனைப் பற்றி அறிந்துகொண்டு தனது ஒவ்வொரு படையெடுப்பிற்கு முன்னரும் அம்மனை வழிபட்டு வந்ததாகக் கூறுவோரும் உண்டு. எப்படி இருந்தாலும், போரில் வெற்றியினை வேண்டி ராஜராஜேஸ்வரியின் படைத் தளபதியாகக் கருதப்படும் மஹாவாராஹியை பூஜித்து வந்தார்கள் என்பதில் எவ்விதமாற்றுக் கருத்தும் இல்லை.ஜோதிட உலகைப் பொறுத்தவரை வாராஹியை செவ்வாய் கிரகத்தின் மீது தனது ஆளுகையைக் கொண்டவளாக ஜோதிடர்கள் காண்கிறார்கள். காவல்துறை, ராணுவம், படை போன்றவற்றை வழி நடத்துகிறவர்களின் ஜாதகத்தில் பொதுவாக செவ்வாயின் பலம் அதிகமாக காணப்படும். அதேபோல அரசியலில் பதவியைப் பெறுவதற்கும் செவ்வாயின் அனுக்கிரகம் என்பது வேண்டும். ராஜராஜேஸ்வரியின் படைத்தளபதியாகக் கருதப்படும் வாராஹி செவ்வாயின் மீது தனது ஆளுகையைக் கொண்டிருக்கிறாள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேபோல ஆகமவிதிகளுக்குப் புறம்பாக இவ்வாலயம் எழுப்பப்பட்டிருக்கிறது, ஆலயத்தினுடைய விமானம், ராஜகோபுரத்தை விட சிறியதாக இருக்கவேண்டும், ஆனால் இங்கே விமானமானது ராஜகோபுரத்தை விட உயரத்தில் பெரிது, வாஸ்து சரியில்லை, இதனால்தான் இந்த ஆலயத்திற்குள் நுழைபவர்களின் பதவி பறிபோகிறது என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அறியாமல் பிதற்றுகிறார்கள் எனக் கடுமையாக சாடுகிறார்கள் ஆகம சிரோண்மணிகள். மொத்தமுள்ள 28 ஆகமங்களில் இவ்வாலயம் மகுடாகமம் என்ற ஆகம விதிப்படி எழுப்பப்பட்டுள்ளது என்றும், அந்த விதிமுறையின்படிதான் இங்கு துவஜஸ்தம்பத்திற்கு பின்னால் நந்தியம் பெருமான் எழுந்தருளியிருக்கிறார் என்றும் ஆணித்தரமாக கூறுகிறார்கள். வாஸ்து பற்றிய கேள்வி எழும்போது வாஸ்து லட்சணத்திற்கு மூலமான அஷ்டதிக்பாலகர்களின் மூர்த்தங்கள் சிலைவடிவினில் அவரவருக்குரிய திக்குகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது இந்த ஆலயத்தில் மட்டும்தான்.இந்தமாதிரியான சிலை அமைப்பு இவ்வாலயத்தைத் தவிர தமிழகம் மட்டுமல்லாது தரணியிலேயே வேறெங்கும் இல்லை என்றும் முழுக்க முழுக்க வாஸ்து சாஸ்திர முறைப்படியும், ஆகம விதிமுறைகளின் படியுமே இவ்வாலயம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அடித்துக் கூறுகிறார்கள். திருவண்ணாமலையில் கூட ஆலயத்தைச் சுற்றிலும் மலை சுற்றும் பாதையில் திக்பாலகர்கள் பூஜித்த லிங்கங்கள் மட்டுமே உள்ளன, திக்பாலகர்களுக்குரிய மூர்த்தங்கள் அதாவது சிலைவடிவங்கள் கிடையாது.மற்றுமொரு ஜோதிடரீதியான சுவாரசியமான தகவலையும் பார்ப்போம். ராஜராஜசோழனின் நட்சத்திரம் சதயம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதுபோக இப்பொழுது பரிபாலனம் செய்து வரும் ராஜா போன்ஸ்லேவும் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். அவரது தாத்தா ராஜாராம் ராஜா சாகேப் என்பவரது ஜென்ம நட்சத்திரமும் சதயம்தான். (இவரது மகனான தற்போதைய ராஜாவின் தந்தையானவர் இளம்வயதிலேயே இறந்துவிட்டதால் பட்டத்திற்கு வரவில்லை) ஆக இவ்வாலயத்திற்கும், சதய நட்சத்திரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஸப்த மாத்ருகா தேவியரில் திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களுக்குரிய தேவியாக வாராஹி அமைந்திருக்கிறாள் என்பதனாலேயே மாமன்னர் ராஜராஜன் வாராஹியை பிரதிஷ்டை செய்திருக்கிறான் என்றும் கூறுகிறார்கள். திருவாதிரை-ருத்ரன், சுவாதி-வாயு, சதயம்- வருணன் என்று நட்சத்திர சூக்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை பார்க்கும்போது வருணனை பொழிய வைத்து சோழ வளநாடு சோறுடைத்தது ஆக ஆக்கியதும் வாராஹியே என்ற நம்பிக்கையும் உள்ளது. அதுமட்டுமல்லாது, இச்சந்நதியில் ஒருபுறம் உலக்கையையும், மறுபுறம் கலப்பையையும் கொண்டே அம்பிகை காட்சி அளிக்கிறாள். இவை இரண்டுமே விவசாயத்தின் பிரதான சின்னங்கள். தஞ்சையைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயத்தை தழைக்கச் செய்வது அம்பிகையே என்பதும் திண்ணமாகிறது. விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்பவர்கள் மட்டுமல்லாது நாட்டைக் காக்கும் காவலர்களான அரசியல் தலைவர்களையும் வாழ வைக்கும் அம்பாள் காவல் தெய்வமாகக் குடி கொண்டிருக்கும் ஆலயம் தஞ்சை பெரிய கோயில் என்றால் அது மிகையில்லை. ஜோதிட ரீதியாக அம்பிகை செவ்வாய் கிரகத்தின் மீது தனது ஆளுகையைக் கொண்டிருக்கிறாள் என்று பார்த்தோம். செவ்வாய் பூமிகாரகன் என்றும், நிலம் சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கு செவ்வாயே காரணம் என்றும் ஜோதிடர்கள் கூறுவார்கள். ஏமாற்றி நிலத்தினை பிடுங்குவோர்களிடம் மாட்டிக்கொண்டு நிலத்தினை இழந்தவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் அம்பிகையை வழிபட்டு வர சீக்கிரமாக அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்பதற்கு பல உதாரண சம்பவங்கள் சமீப காலத்தில் நடந்துள்ளன. அது மட்டுமல்லாது உடல்நலம் பாதிக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் கூட அம்பிகையின் அருளால் நலம் பெற்றதை அறியும்போது மெய்சிலிர்க்கிறது. எனக்குத் தெரிந்த ஒருவரின் இரண்டு கிட்னிகளும் செயலிழந்துபோன நிலையில் அவரது தொண்டர்கள் வாராஹிக்கு உகந்த பஞ்சமி நாளன்று வழிபட, அடுத்த பஞ்சமியிலேயே அவருக்கு கிட்னி தானம் கிடைத்து அறுவை சிகிச்சை நடந்து இன்று நலமோடு இருப்பது மட்டுமல்லாமல், அவ்வப்போது வந்து தரிசித்துவிட்டும் செல்கிறார். ஜாதகரீதியாக செவ்வாய் கிரகமே கிட்னியைச் செயலிழக்கச் செய்திருக்கிறது என்பதை ஜோதிடர்கள் அறிவார்கள். செவ்வாயால் உண்டான தோஷங்கள் நீக்கப்பட்டது அம்பிகையின் அருளால்தானே. இங்கு இன்னொரு விஷயமும் கவனிக்கப்பட வேண்டும். ஜோதிஷ சாஸ்திர ரீதியாக பஞ்சமியில் செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்பார்கள். வெற்றியைத் தரும் வாராஹிக்கு உகந்தநாள் பஞ்சமி என்பதும் கவனிக்கத்தக்கது.சத்ரு சம்ஹாரிணியாக, சிவபெருமான் அருளுகின்ற வரங்களை நமக்கு வாங்கித் தருகின்ற ரெப்ரசன்டேட்டிவ் ஆக, வரப்பிரசாதினியாக, அநியாயமான முறையில் எதிரிகளால் பாதிக்கப்படுகின்ற அப்பாவிகளுக்கு நியாயமான தீர்வினை வழங்குகின்ற நீதி தேவதையாக, தவறு செய்பவர்களை தண்டிக்கும் தண்டினியாக, வெற்றி யைத் தரும் ஜெயரூபிணியாக, அபய வரத ஹஸ்தங்களுடன், ஒருபுறம் உலக்கையும், மறுபுறம் கலப்பையையும் கொண்டு அமர்ந்து அருள்பாலிக்கும் மஹாவாராஹி அம்மன் குடி கொண்டிருக்கும் தஞ்சை பெருவுடையார் ஆலயம் உயர்பதவியைப் பெற விரும்பும் எல்லோருக்குமே ஒரு வரப்பிரசாதம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.?அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் அமாவாசை, பௌர்ணமி போன்றவை நாள் மாறி வரும் பட்சத்தில் அங்குள்ள இந்துக்கள் என்றைக்கு அனுஷ்டிக்க வேண்டும்?- அயன்புரம் த. சத்தியநாராயணன்.அமெரிக்கா மட்டுமல்ல எந்த ஊரில் வசித்தாலும் அமாவாசை, பௌர்ணமி அல்லது திதியை அடிப்படையாகக் கொண்டு வருகின்ற பண்டிகைகள், விரதங்கள் உட்பட எல்லா விஷயங்களையும் அந்த ஊர் கணக்கின்படி என்றைக்கு வருகிறதோ அன்றுதான் அனுஷ்டிக்க வேண்டும். அந்நிய தேசத்தில் வசிப்பவர்கள் இதுபோன்ற விரதாதி அனுஷ்டானங்களுக்கு நம் இந்திய நேரப்படி அல்லது இந்திய பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாளையும் நேரத்தையும் கணக்கில் கொள்ளக் கூடாது.?தலைவிதி என்பது என்ன? விதியை மதியால் வெல்ல முடியுமா?- சு. பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.விதியை மதியால் வெல்லலாம் என்பது பழமொழி. அவ்வாறு மதியால் வெல்ல இயலும் என்பதற்கு கூட விதி சரியாக அமைந்திருக்க வேண்டும். புரியும்படியாகச் சொல்ல வேண்டும் என்றால் விதி, மதி, கதி இவை மூன்றும் ஜோதிட சாஸ்திரம் சம்பந்தப்பட்ட வார்த்தைகள். விதி என்பது ஜென்ம லக்னத்தையும், மதி என்பது பிறக்கும்போது சந்திரனின் அமைவிடமான ஜென்ம ராசியையும், கதி என்பது கதிரவன் எனப்படுகின்ற சூரியன் அமர்ந்துள்ள ராசியையும் குறிக்கும். லக்ன பாவக ரீதியாக நேரம் சரியில்லை எனும்போது ஜென்ம ராசியினைக் கொண்டு நல்ல நேரம் உள்ளதா என்று ஆராய்வர். இதனை கோச்சாரம் என்றும் சொல்வார்கள். அதுவும் சரியில்லை என்றால் சூரியனின் இருப்பிடத்தைக் கொண்டு பலனுரைப்பர். மேற்கத்திய நாடுகளில் சூரியன் அமர்ந்துள்ள ராசியைத்தான் ஜென்ம ராசியாகக் கருதுவர். அதாவது மேற்கத்திய ஜோதிடத்தில் விதி, மதியை விட கதிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பர். இது தவிர, ஒரு மனிதனின் வாழ்க்கையில் முதல் 30 வருடங்களை விதியாகிய ஜென்ம லக்னமும், அடுத்த 30 வருடங்களை மதியாகிய ஜென்ம ராசியும், அதற்கு அடுத்த 30 வருடங்களை கதி என்று அழைக்கப்படும் சூரியன் அமர்ந்துள்ள ராசியும் தீர்மானிக்கின்றன என்று ஒரு சில ஜோதிட நூல்கள் பலன் உரைக்கின்றன. முதல் 30 வருடங்கள் வாழ்க்கையில் சிரமப்படுபவன், அடுத்த 30 வருடங்களில் வளமாய் இருப்பான் என்ற பொருளில் விதியை மதியால் வெல்லலாம் என்ற இந்த பழமொழியானது தோன்றி இருக்கலாம். ஆனால், பெரும்பாலான ஜோதிடர்கள் தங்கள் அனுபவத்தில் கண்டது விதி என்ற லக்னமே வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதே ஆகும். விதி என்று அழைக்கப்படும் ஜென்ம லக்னம்தான் ஜோதிட அறிவியலின்படி மனிதனின் தலைப்பாகத்தைக் குறிக்கிறது. இந்த விதி என்பதும் தலைவிதி என்பதும் ஒன்றுதான். ஆகவே மதியை விட விதியின் வலிமையே பெரியது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

The post தஞ்சை பெரிய கோயிலில் உள்ள வாராஹியைப்பற்றி சொல்லுங்களேன்? appeared first on Dinakaran.

Tags : warahii ,thanjai ,Warahi ,Korai Ganesan ,Bonnyummanmad ,
× RELATED தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு பணி...